Wednesday, May 9, 2018

சதுரகிரி

✴சதுரகிரி உச்சிமீது ஏறி-அதைத் தானங்கே பார்த்து பிரமானந்தம் மீறி
இது கயிலாச கிரியென்று-போற்றி இனிமையாய் வழிதெரிந்து அவ்விடம் சென்று.
கருநெல்லிக் காட்டுக்குள் சென்றே-உட் கருவான தாமரைத் தடாகத்துள் நின்றே
பெருவாரித் தீர்த்தங்கள் ஆடி-வாய் பேசாமல் ஊமைபோல் மோனத்தை நாடி
கருஞ்சாரை வெண்சாரை யோட-அதைக் கண்டு ஒடுங்கி வழிதனைத் தேடப்
பெரும்பாலும் அருவி செறிந்து-வரப் பிறங்கும் பிரமானந்த மிதுவென்று அறிந்து
மூலக் கணேசனைக் கண்டு-அவர் முன்னின்று போற்றியே தெரிசித்துக் கொண்டு 
கோலத்துடன் அங்கு இருந்தும்- செல்லக் குண்மாகும் ஆனந்தப் பரவெளி பொருந்தும்.




✴சதுரகிரியாகிய உச்சந்தலையில் சுழுமுனை வழியாக ஏறுவதே பிரம்மானந்தமாகும். அதுவே கைலாசகிரியாகும். அங்குப் போகும் வழியை அறிந்து இனிதுடன் செல்க. கற்பகாலம் வாழச் செய்து ஆயுள் நீடிக்கும் கரு நெல்லிக்காடாகிய சகஸ்ராரத்தில் உள்ள ஆயிரம் தாமரை குளத்தில் யோக சித்தியால் ஊறும் அமுதினை பருகிடு. கடுஞ்சாரை வெண்சாரை எனும் நாடிகளை அறிந்து அதை சார்ந்து அமுதூறும் பகுதியே பிரமானந்தம் ஆகும். மூலாதாரத்தில் கணேசனைப் பார்த்து வணங்கி நின்றால் நற்குண நிலமாகிய ஆனந்த பரவெளியை அடையலாம்.




✴சோதி சொரூபத்தைப் பார்த்து-அதிற் சொக்கியே நின்றிடத் தேகமும் வேர்த்து
ஆதி மகாலிங்கங் கண்டு-அதில் ஐம்புலன் ஒடுங்கியே ஆனந்தங் கொண்டு
சுந்தர தெரிசனம்செய்து-சிற் சொரூப நிலையதனில் நின்று நான் உய்ந்து
அந்தரத் தோர்களைப் போற்றி-இது ஆச்சரியம் என்றேதான் வாசியை ஏற்றி
கண்டுகொண்டேன்சிற் பரத்தை-ஞானக்கண் கொண்டு பார்த்தறிந்தேன் அட்சரத்தை
விண்டுயான் சொல்ல முடியாது-இந்த மேதினியோர்க்குலெகு விற்கிடையாது
மனமானது அடங்கியே போச்சு-இந்த மாயையை விட்டுக் கரையேறல் ஆச்சு
சினமெனுங் கோபம் அறுத்தாச்சு-யோகம் சித்தியதாகவே முத்தியும் ஆச்சு.

✴சோதியாகிய வடிவத்தைப் பார்த்து அதில் சொக்கி நின்றிடுக. அப்போது உடல் வியர்க்கும். நடு நாடியில் ஒளி ஏறுவதே மகாலிங்கம். அதைக்கண்டு ஐந்து புலன்களையும் ஒடுக்கி ஆனந்தம் காண். சிவ சொரூபத்தைச் தரிசித்து தானே அதுவாக இருக்கிறேன் என உணர்ந்து அந்தரத்தில் உள்ள உத்திகளை வணங்கி வியப்புடன் பிராணாயாமத்தை ஏற்றுக. சித்தத்தில் உதிக்கும் பரத்தையை கண்டு கொண்டேன். ஞானக்கண் பெற்று அதன் எழுத்தை அறிந்தேன். உலகின் சாதாரணமானவர்களுக்கு கிடைக்காத அதை வெளியில் சொல்ல முடியாது. மனம் அடங்கி விட்டது, மாயையை விட்டுக் கரையேறினேன். சினத்தை அறுத்துவிட்டேன். யோகமும் சித்தியடைந்து முத்தி கிடைக்கும்.

No comments:

Post a Comment

சதுரகிரி வரலாறு